Wednesday, December 13, 2006

வணக்கம்

வணக்கம்.

நம் தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்த்தால் கவிதை எழுதுபவர் கிடைப்பர். முதல் காதலால் கவிதை, அக்காதல் தோல்வியுற்றதால் கவிதை, கல்லூரியில் சேர்ந்ததும் கவிதை, கல்லூரி முடிவில் கவிதை, இப்படி தும்மல் விக்கல் முதற்கொண்டு எல்லாவற்றையும் கவிதை படுத்தி விட்டோம். 'நானும் கவிதை எழுதுவேன்' என சொல்வர் பலர். உண்மையில் அது 'நான் கவிதையும் எழுதுவேன்' என பொருள் கொள்ள வேண்டும்.

இப்படி கவிதை எழுதுவோர் பலர் இருக்க, சிலர் கவிஞராய் அமைகின்றனர். அப்படிபட்ட ஒரு கவிஞன், மஹாகவிஞன் பாரதி. வெள்ளைத் தாமரை மலர் மீது அமர்ந்து மறை நான்கையும் வாழச் செய்யும் வாணி அவள் பெயரை அடைமொழியாய் பெற்றவன் பாரதி. அப்படிபட்ட கவிஞனை, தமிழ்நாட்டின் தேசிய கவியை, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது சிறியேனின் நீண்ட நாள் வேட்கை. இணையத்தின் துணையுடன், இன்று, இத்திருநாளில் (இன்று என்றுமே திருநாளன்றோ?) இப்பணியைத் துவக்குகிறேன்.

மொழி பெயர்ப்பு அமையும் விதம் இங்கனம் ஆகும். பாடலொன்றை எடுத்து முதலில் ஒவ்வொறு சொல்லிற்கும் பொருள் ஆங்கிலத்தில் விளக்கப்படும். பின் முழு பாடலுக்கும் மொழி பெயர்ப்பு அளிக்கப்படும். அதன்பின் பாடலின் கருத்தாராய்ந்து விளக்கவுரை தரப்படும். இறுதியில் என் மூளைக்கு எட்டிய அளவு பாடல் வடிவில் ஆங்கிலமாக்கம் தரப்படும்.

இவற்றைப் படிக்கவிருக்கும் வாசகர்களுக்கு சில விண்ணப்பங்கள்

1. எக்கருத்தாயினும் துணிந்து சொல்லவும். தவறிருப்பின் கடிந்தே கூறவும். திருத்திக் கொள்ள என்றும் விழைவேன்.

2. HTML, Blogger Template ஆகியவற்றில் தேர்ந்தோர் உதவி செய்ய விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும்.

3. இத்தளத்தைப் பற்றிய தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

4. தாங்களும் இம்முயற்சியில் பங்கு பெற விழைந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். Blogger அழைப்பு அனுப்பப்படும்.

5. பாரதி பற்றி வேறேதும் செய்தியை பகிர்ந்து கொள்ள விழைந்தால் அது பற்றி மின்னஞ்சல் அனுப்பவும் - இத்தளத்தில் தங்கள் பெயருடன் அதனை வெளியிடுவோம்.

வாழ்க பாரதி, வளர்க அவன் புகழ்.

5 comments:

Adiya said...

ரொம்ப நல்லா முயற்சி. என் வாழ்துக்ள்

Agnibarathi said...

அடியா,

மிக்க நன்றி. தொடர்ந்து படித்து கருத்துக்களை தெரிவிக்கவும்

Anonymous said...

வாரமலரின் பின் அட்டை கவிதைகளை படித்த ஆழமான வடு உங்கள் முதல் பத்தியில் தெரிகிறது. வலியை உணர்த்துவதற்கு சுற்றி வளைப்பானேன் என்று வலியை நேராக வாசகர்கள் மேல் செலுத்துபவர்கள் புத்திசாலிகள் தானே :-) கவிதை எழுதிவிடக்கூடும் என்ற பயத்தினாலேயே தமிழ்த்தாய் அவர்கள் காதல் செழித்திட வழி செய்வாள் என்றும் திட்டம் இருக்கலாம்.

இவர்களோடு ஒப்பிடும்போது ஒரு கவிஞன் சோபிப்பதில் பிரமாதம் ஒன்றுமில்லை. நீஙள் நிச்சயமாக அந்த அர்த்தத்தில் எழுதவில்லை என்றாலும் ஐயம் தீர ஒரு முறை துவக்கத்திலேயே முழங்கிவிடலாம்: பாரதியின் மஹாகவித்துவம் மொழி, காலம் கடந்த வித்தகர்களின் கலைக்கு ஒப்பானது; பல சமயம், உயர்வானது.

உங்கள் முயர்சி ப்ரமாதமாக வெற்றி பெற வாழ்த்துக்கள். இதை என்னால் முடிந்தவரை இது போன்ற விஷயங்களில் ஆர்வம் இருப்பவர்களுக்கு தெரிவிக்கிறேன். குறிப்பாக தமிழும் பாரதியும் தெரியாத நன்பர்களுக்கு- மறைவாக நமக்குள்ளே பேசிக்கொள்வது சுவையாக இருக்கும் என்றாலும் கூட :-)

வாழ்த்துக்கள் !

Agnibarathi said...

@MSP - என் மனதின் கருத்தை அப்படியே புரிந்து வெளியிட்டு விட்டீர். தங்களது கருத்துக்களை படிக்கவே ஓராயிரம் வரிகள் எழுதலாம் போல் இருக்கிறது. தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி! மீண்டும் தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து,
அக்னி

suman kanth said...

i want the meaning of "kani nilam"